1789. | ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில? நஞ்சினும் வலிய, நம் நலம்’ என்றார் - சிலர். |
சிலர்-; ‘அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய - மை போன்ற உடம்பினை உடையஇந்த எழிலையுடைய இராமனுக்குப் பொருந்திய; வஞ்சனை - பொல்லாங்கை; கண்டபின் - பார்த்த பிறகும்; வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும் - பிளவுண்டு போகாத மனத்தைக்காட்டிலும்; உயிர் வலிது - நம் உயிர் வலிமையாக இருக்கிறது; சில நினைப்பது என்? - வேறு சில நினைப்பதனால் பயன் என்ன; நம் நலம் - நமது நன்மை; நஞ்சினும் வலிய’ - விடத்தினும் வலியதாயிராநின்றது;’ என்றார்-. இராமனுக்கு நிகழ்ந்த இக் கொடுமை கண்ட பிறகும், நம்நெஞ்சு பிளக்க வில்லை. உயிர் போகவில்லை, நமது நலம் அழகாயிருந்தது என்று தம்மைத்தாமே நொந்துகொள்கின்றனர். 184 |