1790.‘ “மண்கொடு வரும்” என, வழி இருந்தது, யாம்,
எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ?
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்
கண்கொடு பிறத்தலும் கடை’ என்றார் - சிலர்.

     சிலர்-;  ‘மண் கொடு வரும்’ என - இராமன் அரசாட்சி கொண்டு
முடி புனைந்துவருவான் என (அக்காட்சி காண);  யாம் வழியிருந்தது -
வழியில் காத்திருந்தது; எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? -
நினைக்கக் கொடிய வெப்பமுள்ள காட்டில்செல்லுதலைப் பார்ப்பதற்கோ?;
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் - பெண்கொடுந்தொழில்
செய்யப் பொருந்திய நாட்டில்;  கண் கொடு பிறத்தலும் கடை -(அந்தக்
கொடுமைகளைக் காண) கண் உடையவர்களாகிப் பிறத்தலும் கீழ்த்தரமானது;’
என்றார் -.

     ‘கண் செய்த பாவம் கடலிற் பெரிது’ என்று (1706.)முண்சொல்லியதை
ஒத்தது இது.                                                 185