1791. | ‘முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன், “உழுவை சேர் கானகத்து உறைவென் யான்” என, எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து, அழுவதே? அழகிது இவ் அன்பு!’ என்றார் - சிலர். |
சிலர் -; பிறந்து உலகு முழுவதே உடைய மொய்ம்பினோன் - மூத்தவனாகப் பிறந்துஉலகம் முழுவதையும் தனக்கு உடைமையாகப் பெற்ற வலிமை உடைய இராமன்; ‘உழுவை சேர்கானகத்து உறைவெற் யான்’ என எழுவதே? - புலி உள்ள காட்டில் தங்குவேன் யான் என்று சொல்லிப் புறப்படுவதா; எழுதல் கண்டு இருப்பதே? - அவன் புறப்படுவதைப் பார்த்தும்(உடன் செல்லாமல்) நாம் இங்கு சும்மா இருப்பதா; இருந்து அழுவதே?-; இவ் அன்பு அழகிதே?- (நாம் இவனிடத்தில் வைத்த அன்பு அழகாயிருந்தது;’ என்றார்-. ‘எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே?’ இவ் வடியில் ஒரு சொல்லை இன்னொருசொல் பற்றித் தொடர்ந்து வந்துள்ள அழகு காண்க. ‘ஒற்றைச் சர மாலை யணி’ என இதனைக்கூறுவர்; வடமொழியில்‘ஏகாவளி எனப்பெறும். 186 |