1796.‘நிறை மக உடையவர், நெறி செல் ஐம்பொறி
குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற
இறைமகன் திருமனம் இரும்பு’ என்றார் - சிலர்.

     சிலர்-; ‘நிறை மக உடையவர் - பல பிள்ளைகளை உடையவர்கள்;
நெறி செல்ஐம்பொறி குறை -  மனத்தின் வழியில் செல்கின்ற
ஐம்பொறிகளில் ஒன்றிரண்டு குறைந்து ஊனமுற்ற;  மக - பிள்ளை;
குறையினும் - அழிந்தாலும்;  உயிர் கொடுப்பர் - தங்கள் உயிரைப்
போக்கிக்கொள்வர் (இது உலக வழக்கமாகவும்);  முறைமகன் வனம் புக-
அரச உரிமைக்கு  முறையாக உரிய மூத்த பிள்ளை காடு செல்ல;
மொழியைக் காக்கின்ற இறைமகன் - வாய்மையைக் காத்து  வரம்
கொடுத்துள்ள சக்கரவர்த்தியின்;  திருமனம்இரும்பு’ - அழகிய மனம்
இரும்பாகும்;’ என்றார் -

     குறை மக - ஊமை, செவிடு, குருடு முதலிய குறை உடைய பிள்ளை.
‘ஆம்’ உரையசை.                                             191