1797. | வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர், பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்; ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின் தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார். |
வாங்கிய மருங்குலை - உள்வாங்கிய மெலிந்து வளையும் இடையை; வருத்தும்கொங்கையர் - தமது பாரத்தால் வருத்துகின்ற தனங்களை உடைய அழகிய மகளிர்; பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர் - மலர் பூத்த கொடி அசைவது போல் ஒதுங்கி; ஏங்கிய குரலினர் - அழுத குரல் உடையதாய்; இணைந்த காந்தனின் - இரட்டையானகாந்தள் மலர்போல்; செங்கை - சிவந்த கையை; தம் தலையின் மேல் தாங்கியஉளார் - தம் தலைகளின் மேல் தாங்கியவராய் உள்ளனர். மகளிர் தம் தலைமீது கைவைத்து அழுதவண்ணம் உளர் என்றார். ‘கை தலையின்மீது உளார் பூங்கொடி ஒதுங்குவது போல் ஒதுங்கினர்’ என முடிப்பினும்அமையும். 192 |