1799.மஞ்சு என அகிற் புகை வழக்கு மாளிகை
எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்
அஞ்சனக் கண்ணீன் நீர் அருவி சோர்தர,
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார்.

     மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை - மேகம் போன
அகிற் புகையானது சஞ்சரிக்கும் மாளிகையினது; எஞ்சல் இல்சாளரத்து -
குறைதல் இல்லாத (காற்று வழங்கும்) பலகணி வழியாக (இராமனைக் கண்டு); 
இரங்கும் இன்சொலார் - வருந்தும் இனியசொல்லினை உடைய மகளிர்;
அஞ்சனக் கண்ணின் - மை தீட்டப் பெற்ற கண்ணிலிருநது; நீர் அருவி
சோர்தர
- நீர் அருவியாக வழிய; பஞ்சரத்து இருந்து அழும் கிளியின்-
கூட்டின்கண் இருந்து  அழுகின்ற கிளியைப் போல;  பன்னினார் -
சொன்னதையே சொல்லிச் சொல்லிப் புலம்பினார்.

     பலகணி வழியாகத் தலைகாட்டி  அழும் மகளிர் கூட்டில் இருந்து
அழும் கிளி,  போன்றனர்என்க.  பன்னுதல் - திரும்பத் திரும்பச்
சொல்லுதல்,  கிளி சொன்னதைத் திரும்பத் திரும்பச்சொல்லும் ஆதலின்
இங்கே பன்னுதலுக்கும்  உவமையாயிற்று.                          194