1801.மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப்
புக்க இடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு
உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர் -
துக்கம் நின்று அறிவினைச் சூறையாடவே.

     துக்கம் நின்று - துயரம் நிலைத்து நின்று; அறிவினைச் சூறையாட-
அறிவைக் கொள்ளையிட்டுச் செல்ல (அதனால் உணர்வு மயங்கி);  மாதர் -
தாய்மார்கள்;  மக்களை மறந்தனர் - தங்கள் பிள்ளைகளை
மறந்துபோனார்கள்;  புதல்வர் - பிள்ளைகள்;  தாயரைப் புக்க இடம்
அறிந்திலர்
- தாய்மார்கள்புகுந்த இடத்தை அறியாதவர் ஆயினர்;  பூசல்
இட்டு
- அழுது ஆர்ப்பரித்து; உக்கனர் - மனம் உடைந்து; உயங்கினர் -
வாடி;  உருகி - கரைந்து;  சோர்ந்தனர் - சோர்வடைந்தார்கள்.

     பிள்ளைகள் தாயரைத் தேடும் இயல்புடையவர் ஆதலின்,  தேடிக்
கிடையாதவழி  பூசல் இட்டுஉயங்கி உருகினர் என்க. இதற்குக் காரணம்
தாயர் பிள்ளைகளை மறந்தமையே. அவர்கள் துக்கம்நின்று அறிவு
கொள்ளை போனதால் மறந்தனர்.  எனவே,  இராமன் காடு புகுவது
நகரமாந்தரைப்படுத்திய விதம் அறிவித்தவாறு - ‘ஏ’ காரம் ஈற்றசை.   196