1802. | காமரம் கனிந்தெனக் கனிந்த மென் மொழி மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால், தே மரு நறுங் குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன - தவள மாடமே. |
காமரம் கனிந்து என - காமரம் என்னும் பண் முற்றிப் பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி - இனிய மென்மையான பேச்சினை உடைய; மா மடந்தையர் எலாம் - பெருமயுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு சேர்தலால் - வீதியை அடைந்தபடியால்; தவளமாடம் - வெண்ணிற மாளிகைகள்; தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன- தேன் பொருந்திய நறுமணம் வீசும் சுடர் தலை உடைய திருமகளை விட்டுப் பிரிந்த தாமரைமலர்போல் ஆயின. காமரம் என்பது பண் நிரம்பினாற் போன்ற பேச்சு. மகளிர் போனபடியால் வெறுமைஅடைந்த மாளிகையைத் திருமகள் நீங்கிய தாமரைபோல் என்றார். தவளம் - வெண்மை.“திருப்புறக் கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில், புரிக்குழல மடந்தை போகப் புலம்பொடு மடிந்த அன்றே” என்ற சிந்தாமணி (560) இங்கு ஒப்பு நோக்கற்குரியது. ‘ஏ’ காரம்ஈற்றசை. 197 |