1803. | மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற, குழைக் குல முகத்தியர் குழாம் கொண்டு ஏகினர் - இழைக் குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும் உழைக் குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எலாம். |
ஓர் பால் எலாம் - ஒரு பக்கத்தில் எல்லாம்; ஏ உண்டு - அம்பு பட்டு; ஒய்வுறும் - சோர்வடைந்து இறக்கும் நிலை எய்திய; உழைக்குலம் - மான்கூட்டம்; உழைப்பன ஒத்து - துடித்து வருந்துவன போல்; இழைக்குலம் சிதறிட- அணிகலன்கள் கீழே சிந்த; மழைக்குலம் புரை குழல் - மேகக் கூட்டம் ஒத்த கூந்தல்;விரிந்து மண் உற - அவிழ்ந்து தரையில் புரள; குழாம் கொண்டு - கூட்டமாகி; ஏகினார் - சென்றார்கள். தோடு எனப் பொருள் கூறினோம் ஆயினும் குழை என்பது தொங்கலாக இடப்பெற்ற காதணியைக்குறிக்கும். தோடு - செறித்த காதணியாம். கோடு - பனை யோலை, குழை - தளிர் என இவற்றை ஒப்பு நேரிக்கி அமைந்த பெயர்கள். 198 |