1806. | ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென; துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த் தளி துறந்தன பரி; தான யானையும் களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே. |
உயிர் துறந்தென - உயிர் போனார் போல; முகம் - எல்லோருடையமுகமும்; ஒளி துறந்தன - ஒளி மழுங்கின; முகில் தொகையும் - மேகக்கூட்டமும்; துளி துறந்தன - மழைத் துளி துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன- தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன; தானயானையும் - மதப் பெருக்கையுடைய யானைகளும்; மலர்க் கள் உண் வண்டின் - மலரில் தேன் உண்ணும் வண்டைப் போல; களி துறந்தன - களித்தலைக் கை விட்டன. தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே வண்டுகள் களிதுறந்தன என்றதால்இராமன் காடு ஏகும் துயரத்தால் மலர்களில் தேன் இல்லையாயிற்று. 201 |