1807. | நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர் குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும் அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே. |
குடை- குடைகள்; நிழல் பிரிந்தன- நிழல் செய்தலைக் கைவிட்டன; நெடுங்கண் ஏழையர் குழல் - நீண்ட கண்ணை உடைய மகளிர் கூந்தல்கள்; மலர்பிரிந்தன - மலர் சூடுதலை விட்டன; குமரர்தாள் இணை கழல் பிரிந்தன -வீரர்களது அடிகள் கழல் அணிதலைக் கைவிட்டன; சினக் காமன் வாளியும் - கோபம் உடைய மன்மதனது மலர் அம்புகளும்; அழல் பிரிந்தன - காம வெப்பத்தை உண்டாக்குதலை ஒழித்தன; அன்றில் - (என்றும் பிரியாது ஒன்றியிருக்கும்) அன்றிற் பறவைகள்; துணை பிரிந்த- தம் துணையைப் பிரிந்து தனித்திருப்பவாயின. இராமனது பிரிவு உயிரினங்கள் இன்பத்தை இழக்கச்செய்தபடி. யாரும் குடைபிடித்துச் செல்வது இல்லை ஆதலின் குடை நிழல் பிரிந்தன என்றார்.யாரும் வேட்கை உற்றிலர் என்பதனை மன்மதன்வாளி வெப்பத்தை விட்டது என்பதால் உணர்த்தினார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 202 |