1808. | தார் ஒலி நீத்தன, புரவி; தண்ணுமை வார் ஒலி நீத்தன, மழையின் விம்முறும்; தேர் ஒலி நீத்தன, தெருவும் - தெண் திரை நீர் ஒலி நீத்தன நீத்தம் போலவே. |
புரவி - குதிரைகள்; தார் ஒலி நீத்தன - கழுத்திற் கட்டிய கிண்கிணிமாலையின் ஓசையைக் கையிட்டன; தண்ணுமை - மத்தளம்; வார் ஒலி நீத்தன -வாரை இீழுத்துக் கட்டலால் விளையும் ஓசையைக் கைவிட்டன; தெருவும் - வீதிகளும்; தெண்திரை நீர் ஒலி நீத்தன நீத்தம் போல - தெளிந்த அலை நீர் ஒலியை விட்ட கடல் போல; மழையின் - மேகம் போல; விம்முறும் தேர் ஒலி நீத்தன - ஒலிக்கின்ற தேர்களின் ஒலியை இழந்தன. குதிரை ஒட்டுவாரில்லை, மத்தளம் அடிப்பார் இலர், தெருவில் தேர்கள் ஓடவில்லைஎன்றார். அலை ஒழிந்த கடல் தேரோசை இழந்த தெருவுக்கு உவமை ஆயிற்று. ‘ஏ’ஈற்றசை. 203 |