1809.முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு
எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல,
அழ எழும் ஒலி அலது - அரச வீதியே.

     அரச வீதி - அரசர்களுக்குரிய வீதிகள்; முழவு எழும் ஒலி இல -
தண்ணுமையிலிருந்து உண்டாகும் ஒலிகள் இல; முறையின் - இசை
முறைப்படி; யாழ் நரம்புஎழ - யாழின் கண் நரம்பு எழுப்ப; எழும் ஒலி
இல -
எழுகின்ற ஒலிகள் இல;  இமைப்பு இல் கண்ணினர் - இமையாக்
கண்ணினராய தேவர்களது; விழவு -விழாவிற்காக;  எழும் ஒலி இல -
உண்டாகின்ற ஒலிகளும் இல; அழ எழும் ஒலி அலது வேறும் ஒன்று
இல -
அழுவதனால் உண்டாகின்ற கூக்குரல் ஓசை அல்லாமல் வேறு ஓர்
ஒலிஇலவாயின.

     முழவு - மத்தளம். தண்ணுமை குடமுழா என்பன ஒரு நிகரன. முறை
என்பது பண்ணாகும்.தேவர்களுக்குச்  செய்யும்  திருவிழாக்களும் நின்று
போயின. கேட்க வேண்டிய ஓசைகள்கேட்கவில்லை; கேட்கத் தகாத ஓசை
மட்டுமே  கேட்டது.                                     204