1810.தெள் ஒளிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை
நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே;
புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே;
கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே.*

     தென் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை - தெளிந்த
ஒலியையுடைய காற்சிலம்புகள் இடையறாது  ஒலிக்கின்ற அழகிய வீடுகள்
(இப்போது);  நள் ஒலித்தில -நள்ளென்ற ஓசை உடையவாய்
ஒலிக்கவில்லை;  நளிர் - செறிந்த;  கலையும் அன்ன- மேகலை
அணிகளும் ஒலிக்கா ஆயின; புனல் - நீரில்; புள் ஒலித்தில -பறவைகள்
ஒலிக்கவில்லை; பொழிலும் - சோலைகளும்; அன்ன - அதுபோலப் புள்
ஒலிக்கா ஆயின; மலர் - பூக்களில்; கள் - வண்டுகள் ஒலித்தில; களிறும்-
யானைகளும் (மதநீர் படாமையால்);  அன்ன - அதுபோல வண்டுகள்
ஒலிக்காவாயின.

     சிலம்பு, மேகலை அணிவாரும்  இயங்குவாரும் இல்லை. பறவைகள்
அடங்கின. வண்டுகளும்ஓடுங்கின என்றார். ‘ஏ’ காரங்கள் அசை.      205