கலித்துறை  

1815.ஓடை நல் அணி முனிந்தன.
     உயர் களிறு; உச்சிக்
சூடை நல் அணி முனிந்தன,
     தொடர் மனை; கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன,
     அம் பொன் செய் இஞ்சி;
பேடை நல் அணி முனிந்தன.
     மென் நடைப் புறவம்.

     உயர்களிறு - பெரிய யானைகள்; ஓடை நல் அணி முனிந்தன -
முகபடாம்ஆகிய நல் அணியை வெறுத்தன; தொடர்மனை - வரிசையான
மாளிகைகள்; உச்சிச் சூடைநல்லணி முனிந்தன - தம் சிகரத்தில்
அணிதற்குரிய சூடா  என்னும் நல்லணிகளை அணியாமல்வெறுத்தன;
அம்பொன் செய் இஞ்சி - அழகிய பொன்னாற் செய்த மதில்கள்;
கொடியின் ஆடை நல் அணி முனிந்தன - கொடிச் சீலை ஆகிய நல்ல
அழகினை வெறுத்தன; மென் நடைப் புறவம் - மென்மையான
நடையினையுடைய புறாக்கள்; பேடை நல்லணி முனிந்தன- பேடையொடு
கூடிய நல்ல அணியை வெறுத்தன.

     ‘முனிந்தன’ என்பது இங்கே புனையாமையைக் குறித்ததாம். யானைகள்
முகபடாம் அணிந்துஅலங்கரிக்கப் பெறவில்லை. மாளிகையின் கோபுர
உச்சிகள் அழகு செய்யப் பெறவில்லை.மதில்களில் கொடிச் சிலை இல்லை.
புறாவும் பெடையும் கூடி அணையும் அழகு இல்லை என்பதாம்.       210