1817. | ஓவு இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய, மேவு தொல் அழகு எழில் கெட, விம்மல் நோய் விம்ம, தாவு இல் ஐம்பொறி மறுகுற, தயரதன் என்ன ஆவி நீக்கின்றது ஒத்தது - அவ் அயோத்தி மா நகரம். |
அவ் அயோத்தி மா நகரம் -; ஓவு இல் நல் உயிர் - ஒழிதல் இல்லாத நல்ல உயிர்; உயிர்ப்பினோடு - பெரு மூச்சோடு; உடல் பதைத்து - உடலில் துடித்து; உலைய - அங்கும் இங்குமாய் வருந்த; மேவு - பொருந்திய; தொல் எழில்அழகு கெட - பழைய வளரும் அழகு கெட; விம்மல் நோய் விம்ம - அழுகைநோய் மிக; தாவு இல் ஐம்பொறி மறுகுற - கெடுதல் இல்லாத ஐம்பொறிகள் சுழன்று கலங்க; தயரதன் என்ன - தயரதனைப் போல; ஆவி நீக்கின்றது ஒத்தது - உயிர் விடுவதைத்போல் உள்ளது. மன்னன் எவ்வழி அவ்வழி மன்னுயிர் ஆதலின், அயோத்தி நகரின் ஆவி நீக்குவார் போல்ஆயினர் என்பதை நகரின்மேல் ஏற்றிக் கூறினார். உயிர் உலைகிறது. துன்பம் மிகுகிறது. அழகுகெடுகிறது, ஐம்பொறி கலங்குகிறது இத் தனையும் உயிர் போவதற்கு முன் நிகழ்வனவாம். 212 |