இராமன் சீதை இருக்குமிடம் சேறலும் அவள் திடுக்குறலும்   | 1818. | உயங்கி  அந் நகர்      உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்  மயங்கி ஏங்கினர்; வயின்வயின்      வரம்பு இலர் தொடர,  இயங்கு பல் உயிர்க்கு ஒர்      உயிர் என நின்ற இராமன்   தயங்கு பூண் முலைச் சானகி      இருந்துழிச் சார்ந்தான். |  
      அந்நகர் - அந்த அயோத்தி நகரம்; உயங்கி -  வாடி; உலைவுற-  வருந்த;  ஒருங்கு - ஒருசேர;  உழைச் சுற்றம் - ஏவல் செய்வோர்;  மயங்கிஏங்கினர் - அறிவு கலங்கி அழுது; வயின் வயின்- அங்கங்கே;  வரம்பிலர்தொடர - அநேகர் பின்பற்றி வர;  இயங்கு பல் உயிர்க்கு  ஓர் உயிர் என நின்றஇராமன் - சஞ்சரிக்கின்ற பல உயிர்களையும்  உடலாகக் கொண்டு அவற்றுக்கு ஒப்பற்ற உயிராக இருக்கின்ற  இராமன்;  தயங்கு - விளங்குகின்ற;  பூண் முலைச் சானகி -அணிகலன் அணிந்த  தனங்களை  உடைய சீதை;  இருந்துழிச் சார்ந்தான் - இருந்த அரண்மனையை அடைந்தான்.      உழைச் சுற்றம் அருகிருந்து வேலை செய்வோர். ‘உயிர்க்கு உயில் என  நின்ற இராமன்’என்பதனைத் திருமாலாகிய பரம்பொருள் தத்துவத்தில்  உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தும்தன்மையை நோக்கித் கூறியதாகவும்  கொள்ளலாம்.                                                213  |