இராமன் பதில்  

1822.‘பொரு இல் எம்பி புவி புரப்பான்; புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்,
கருவி மா மழைக் கல் - கடம் கண்டு, நான்
வருவென் ஈண்டு; வருந்தலை நீ என்றான்.

     ‘பொரு இல் எம்பி புவி புரப்பான் - ஒப்பற்ற என் தம்பியாகிய
பரதன் பூமியைக்காப்பாற்றி அரசாள்வான்; புகழ் - புகழ்தற்குரிய; இருவர்
ஆணையும் ஏந்தினென் -
தந்தை,  தாய் இருவரது கட்டளையையும்
தலைமேல் தாங்கினேன்;  நான் இன்று போய் -நான் - இன்றே
புறப்பட்டுச் சென்று;  கருவி மாமழைக் கல்தடம் கண்டு - தொகுதியான
சிறந்த மேகம் நிரம்பிய மலை வழிகளை உடைய காட்டைப் பார்த்து;
ஈண்டு வருவென் -இங்கே வருவென்;  நீ வருந்தலை’ - நீ
வருத்தமுறாதே;  என்றான்-.

     ‘கருவி’ - இடி, மின்னல் முதலியவற்றை உடைய தொகுதி என்று
பொருள். ‘கருவி தொகுதி’(தொல். சொல்.354) “கருவி வானம்” (அகநா.4:6)
என்பது  காண்க.  சீதைக்கு வருத்தம்மிகாது  இருக்க ‘இன்று  போய்க்
கண்டு வருவென்’ என்றான்.                                    217