1825. | அன்ன தன்மையள், ‘ஐயனும், அன்னையும், சொன்ன செய்யத் துணிந்தது தூயதே; என்னை, என்னை, “இருத்தி” என்றான்?’ எனா, உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள். |
அன்னதன்மையள் - அத்தகைய இயல்பினை உடைய சிதை; ‘ஐயனும் அன்னையும்சொன்ன- தந்தையும் தாயும்இட்ட கட்டளைகளை; செய்யத் துணிந்தது தூயதே -நடந்த முடிவு செய்தது தூய்மை உடையதே (ஆயினும்); என்னை-; என்னை இருத்தி என்றான்?’- எதனால் அரண்மனையிலேயே இரு என்று சொன்னான்;எனா-என்று; உன்னி உன்னி - நினைத்து நினைத்து; உயிர்உமிழா நின்றாள் - உயிர் துடிப்ப இருந்தாள். குரவர் சொல் கேட்டல் அறமே ஆயினும் கொண்ட மனைவியைப் பிரிதல் எதனால் என்றுஅறியாது வருந்துவன் ஆயினாள். பாற்கடலிலிருந்து பிரியாமல் அயோத்தி வரை உடன்வந்தவள், அயோத்தியிலிருந்து அருகில் உள்ள வனம் போகாமல் தடுக்கப்பெறுவது கண்டுவருந்தினாளாம். 220 |