சீதை தன் மன ஆற்றலை உரைத்தல்  

1827.‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்.

     ‘பரிவுஇகந்த மனத்து  ஒரு பற்று  இலாது - இரக்கம் அற்ற
மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல்;  ஒருவுகின்றனை- என்னை
விட்டு விலகிச் செல்கின்றாய்;  ஊழி அருக்கனும் -பிரளய காலத்துச்
சூரியனும்;  எரியும்  என்பது - கடுவான்என்பது; யாண்டையது? -
எவ்விடத்துள்ளது?  ஈண்டு - இவ்விடத்து  (என்திறத்தில்); நின்
பிரிவினும் -
உன் பிரிவு சுடுவதைக் காட்டிலும்; பெருங்காடு-
உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு; சுடுமோ?’- என்னைச்
சுடுமோ;’ என்றாள் -.

     உன்னால்  வரும்  பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச்
சூரிய வெப்பமும்நிகராகாது;  எனவே, ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’
என்றாள்.  ‘பெருங்காடு  இன்னாஎன்றீராயின்.  இனியவோ பெரும 
தமியேற்கு  மனையே’ (குறுந். 124) என்பதும் காண்க.               222