சீதை மரவுரி அணிந்து இராமன்பால் வந்து நிற்றல்  

1829.அனைய வேலை, அக மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்-
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்.

     அனைய வேலை - அப்பொழுது;  அகமனை எய்தினள் -
மாளிகைக்குள்ளேசென்றாள்; புனையும் சீரம் - உடுத்தற்குரிய  மரவுரியை;
துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு;
புனைந்தனள் - உடுத்திக் கொண்டு; நினைவின் - உடன் போம்
கருத்தோடு;  வள்ளல் பின் வந்து - இராமனுக்குப்பின்புறமாக வந்து;
அயல் - அருகிலே; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் -
பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்;
நின்றனள்-

     ‘நினைவின்’ என்பதற்கு நினையும் மாத்திரத்து  எனக் கூறி,  இராமன்
சிந்திக்குமளவிலேயேஅவ்வளவு விரைவாக  மரவுரி  உடுத்தி அயல் வந்து
நின்றாள் எனலும் ஆம்.  கையினள் - செயலினள்(கை - செய்கை)
எண்ணல்,  துணிதல்,  செய்தல்  மூன்றும் பிராட்டியிடத்து  விரைந்து
நிகழ்ந்தன.                                                  224