சீதையைக் கண்டோர் வருத்தம்  

1830. ஏழைதன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;
வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ? -
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே!

     ஏழை தன் செயல் - சீதையின் மரவுரி  உடுத்த செயலைக்;
கண்டவர்  யாவரும் -பார்த்த எல்லோரும்; வீழும் மண்ணிடை
வீழ்ந்தனர்
- இறத்தற்கு இடமான நிலத்தில்விழுந்தார்கள்; வீந்திலர் -
இறக்கவில்லை;  வாழும்  நாள் உள என்றபின் -ஆயுள் நாள் இன்னும்
இருக்குமானால் அவர்கள்;  மாள்வரோ? -  இறப்பார்களோ; ஊழி
பேர்கினும் -
பிரளயமே  நேரிட்டாலும்;  உய்குநர் உய்வர் - பிழைக்கும்
விதி உள்ளவர் பிழைப்பர்.

     மிக்க சோகமும்  உயிர்த்துடிப்பும்  நிகழ்ந்தது  கண்டவர்  வீழ்ந்து
இறக்காமைக்குக்காரணம் அவர்களுக்கு ஆயுள் உள்ளமையே அன்றி
வேறன்று  என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. ‘ஏ’காரம் ஈற்றசை.   225