1831.தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர்,
ஆயம் மன்னிய அன்பினர் என்று இவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான்
தூய தையலை நோக்கினன், சொல்லுவான்;

     தாயர் -;  தவ்வையர் - தமக்கைமார்கள்;  தன்துணைச் சேடியர் -
சீதைக்குத் துணையாகிய தோழிப் பெண்கள்; ஆயம் மன்னிய அன்பினர்-
தோழியர்கூட்டமாக  உள்ள அன்பினை உடையவர்கள்;  என்று  இவர் -;
தீயில் மூழ்கினர் ஒத்தனர் -
நெருப்பில் விழுந்து முழுகியவர்களைப்
போன்று ஆனார்கள்; செங்கணான் - சிவந்தகண்களை உடைய இராமன்;
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் - கற்பிற் சிறந்தசீதையைப்
பார்த்துச் சொல்லுகின்றான்;

     ஆடவர்க்குச் செங்கண் கூறல் வழக்கு. நோக்கினன்-முற்றெச்சம்.  226