1833. கொற்றவன் அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே’
என்- துறந்தபின், இன்பம் கொலாம்?’ என்றாள்.

     கொற்றவன் - அரசனாகிய இராமன்;  அது கூறலும் - அச்சொல்
சொல்லுதலும்;  கோகிலம் செற்றது அன்ன குதலையள் - குயில் கோபம்
கொண்டது போன்றகுதலைப் பேச்சினை உடைய சீதை;  சீறுவாள் -
கோபித்து;  ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே? - உம்மை அடைந்து
நின்ற துன்பம் நான் உடன் வருவதாகிய இது ஒன்றுதானோ;  என் துறந்த
பின் இன்பம் கொல்’ -
என்னை இங்கேயே விட்டு விட்டுப் போனபிறகு
காட்டில் உங்களுக்கு  இன்பமே  உண்டாகும் போலும்;’  என்றாள் -.

     குதலை - பொருள் தெரிந்து  சொல் தெரியாதது. ‘ஆம்’  உரையசை.
‘கொல்’ ஐயம்.                                               228