1844.அந்தியில் வெயில் ஒளி அழிய, வானகம்,
நந்தல் இல் கேகயன் பயந்த நங்கைதன்,
மந்தரை உரை எனும் கடுவின் மட்சிய
சிந்தையின் இருண்டது, செம்மை நீங்கியே.

     வானகம் - ஆகாயம்;  அந்தியில் - மாலைக் காலத்தில்; வெயில்
ஒளி அழிய -
சூரியனது ஒளி இல்லாமற் போக; நந்தல் இல் - கெடுதல்
இல்லாத; கேகயன் பயந்த நங்கைதன் - கேகய நாட்டரசன் புதல்வியாகிய
கைகேயியினுடைய;  மந்தரை உரை எனும் கடுவின்- மந்தரைக் கூனியின்
வார்த்தை என்னும் நஞ்சால்; மட்கிய -மங்கிப் போன (நிலை கெட்ட);
சிந்தையின் - மனம் போல; செம்மை நீங்கி -செம்மைத் தன்மை போய்;
இருண்டது - இருளடைந்தது.

     கூனி வார்த்தையால் நெறிகெட்ட கைகேயியின் இருளடைந்த மனம்
போல வானம் செம்மைநீங்கி,  ஒளி குன்றி இருளடைந்தது  என்றார்.
அங்கே இருள் - வஞ்சனை,  செம்மை - நேர்மை. வானத்தின் செம்மை
செவ்வானத்தின் செம்மை - எனக் கொள்க.  ‘ஏ’ காரம் ஈற்றசை.         5