1852. | மாக மணி வேதிகையில், மாதவி செய் பந்தர். கேகய நெடுங் குலம் எனச் சிலர் கிடந்தார்; பூக வனம் ஊடு, படுகர்ப் புளின முன்றில், தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார். |
சிலர் - சில மகளிர்; மாதவி செய்பந்தர் - குருக்கத்திக் கொடியால் அமைக்கப் பெற்ற பந்தரில்; மாக மணி வேதிகையில் - ஆகாயத்தைப் போன்ற நீலமணிகளால் அமைந்த திண்ணையில்; கேகய நெடுங்குலம் என - மயிலின் பெருங்கூட்டம்போல; கிடந்தார் - உறங்கினார்; சிலர் - சில மகளிர்; பூக வனம் ஊடு- கமுகங்காட்டின் இடையே; படுகர் - மடுவிடத்தில்; புளின முன்றில் -மணல்மேடுகளில்; தோகை இள அன்ன நிரையின் - தோகையுடைய இளைய அன்ன வரிசைகளைப் போல; துயின்றார் - தூங்கினார். சிலர் மயில்போல, சிலர் அன்னம் போல உறங்கினர். நீலமணித் திண்ணையில்உறங்கியவர் நீல நிற மயில் போன்றார் என்றும், வெண்மையான மணல் மேடுகளில்உறங்கியவர்கள் வெள்ளையான அன்னம் போன்றார் என்றும் கூறியது. ஒரு நயம். வேதிகை -திண்ணை. பூகம் - கமுகு. புளினம் - மணல்மேடு. 13 |