1853. | சம்பக நறும் பொழில்களில், தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன எனச் சிலர் குழைந்தார்; வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார். |
சிலர்-; சம்பக நறும் பொழில்களில் - நறுமணம் உள்ள சண்பகச் சோலைகளில்; தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என - இளைய வஞ்சிக் கொடிகள் அழுது முறிந்தனபோல; குழைந்தார் - சோர்ந்து தங்கினார்கள்; சிலர்-; வம்பு அளவுகொங்கையொடு - கச்சு அணிந்த தனங்களுடன்; வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள்என - மணற்குன்றுகளில் வளர்கின்ற அழகியபவளக் கொடிகள்போல; அசைந்தார்- களைத்து உறங்கினார்கள். வாலுகம் - மணல்மேடு, முலை. பவளவல்லி - மகளிர் என உவமை காண்க. 14 |