1854. | தகவும் மிகு தவமும் இவை தழுவ, உயர் கொழுநர் முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள், துயர் முடுக, அகவும் இள மயில்கள், உயிர் அலசியன அனையார், மகவு முலை வருட, இள மகளிர்கள் துயின்றார். |
இள மகளிர்கள் - இளைய பெண்கள்; தகவும் - நற்குணமும்; மிகு தவமும்- சிறந்த தவமும் (கொண்டானைத் தெய்வம் எனக் கொள்ளுதலும் அவன் குறிப்பின் வழிஒழுகலும்); இவை தழுவ - இவை பொருந்தி இருப்ப; உயர் கொழுநர் முகமும் அவர்அருளும் - உயர்ந்த கணவரது முகத்தையும் அவர் கருணையையும்; நுகர்கிலர்கள்-அனுபவியாதவர்களாய்; துயர் முடுக - துன்பம் விரைந்து செலுத்த; அகவும் இளமயில்கள் - ஆடுகின்ற இள மயில்கள்; உயிர் அலசியன அனையார் - உயிர் ஒடுங்கிப் போன தன்மையை ஒத்து; மகவு முலை வருட - குழந்தை முலையை நெருடிக்கொண்டிருக்க; துயின்றார் - தூங்கினார்கள். பால் உண்ண முலையில் பால் இல்லாமையால் குழந்தை முலை வருடுகிறது எனினும் அமையும். உண்டபின்னும், உண்ணும் போதும் குழந்தை முலை வருடல் இயல்பு. 15 |