1855. குங்கும மலைக் குளிர் பனிக்
     குழுமி என்னத்
துங்க முலையில் துகள்
     உறச் சிலர் துயின்றார்;
அங்கை அணையில், பொலிவு
     அழுங்க, முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன எனச்
     சிலர் படிந்தார்.

     சிலர் -;  குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்ன - குங்கும
மலையிலேகுளிர்ந்த பனி திரண்டது  போல;  துங்க முலையில் - தூய
தனங்களில்;  துகள் உற -மணற்பொடி பரவ; துயின்றார் - தூங்கினர் ;
சிலர்-;  அங்கை அணையில் -தமது அழகிய கையாகிற அணையிலே;
முகம் எல்லாம் - தங்கள் முகம் எல்லாம்;  பொலிவுஅழுங்க - ஒளி
மலர்ச்சி வாட;  பங்கயம் முகிழ்த்தன என - தாமரை மலர்கள்
குவிந்துள்ளன என்று கருதும்படி ;  படிந்தார் - கிடந்து தூங்கினார்கள்.

     சிவந்த நகில்கள் வெண்மணல் துகள் பரவியிருப்பது  குங்கும
மலையில் பனி குழுமியது போலும்என்றார்.  பெரும்பாலும் ஆடவரினும்
மகளிரே. அதிகம் துன்பத்தில் துவளுவர் ஆதலின் அவர்களது
துயரத்தையே மிகுதியாக இங்குக் காட்டினார்.                        16