அறுசீர் விருத்தம்  

1857.‘பூண்ட பேர் அன்பினாரைப்
     போக்குவது அரிது; போக்காது,
ஈண்டுநின்று ஏகல் பொல்லாது;
     எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை
     ஒர்ந்து, என்னை, ” அங்கே
மீண்டனன்’ என்ன மீள்வர்; இது
     நின்னை வேண்டிற்று’ என்றான்.

பூண்ட பேர் அன்பினாரை -(நம்மிடத்தில்) பேரன்புடைய இவர்களை;
போக்குவது அரிது - நம்மை விட்டுப்பிரித்துப் போகச் செய்வது இயலாது;
போக்காது - இவர்களை அனுப்பாமல்; ஈண்டுநின்றுஏகல் - இங்கிருந்து
மேலும் வனத்திற்குள் செல்வது; பொல்லாது - நல்லதன்று (தீங்கு
தரும்ஆகையால்); ‘எந்தை! - என் தந்தை போன்ற சுமந்திரனே  நீ -;
இன்னே -இப்பொழுதே; இரதம் தூண்டினை- தேரைச் செலுத்தினையாகி
மீள்வது ஆக்கின் -திரும்பிப்போவதைச் செய்தால்; சுவட்டை ஓர்ந்து -
தேர்ச்சுவட்டை ஆராய்ந்து; என்னை ‘அங்கே மீண்டனன்’ என்ன -
என்னை அங்கே அயோத்திக்குத் திரும்பியவனாகக்கருதி;  மீள்வர் -
திரும்பிச் செல்வர்; இது-; நின்னை - உன்னை; வேண்டிற்று’- வேண்டிக்
கேட்டுக்கொள்கிற செயலாகும்; என்றான் -,

     நகர மாந்தர் அனைவரும் வனவாசம் செய்தல் ஆனது, ஆதலின்
சுமந்திரன் தேரைத் திருப்பிஊர் சென்றால், தேர்ச்சுவடு அயோத்தி போவது
கண்டு இராமன் திரும்பி ஊர் சென்றுவிட்டான்எனக் கருதி நகர மாந்தரும்
அயோத்திக்கு திரும்புவராதலின் அதனைச் செய்க என்று வேண்டினன்.  18