1861. | ‘வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன், என்பு உலப்புற உடைந்து இரங்கும் மன்னன்பால், உன் புலக்கு உரிய சொல் உணர்த்தச் செல்கெனோ? தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? |
‘வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன்- வலிய புலன்களையும் கல்போன்றமனத்தையும் உடைய அறிவற்ற வஞ்சகனாகிய யான்; என்பு உலப்புற உடைந்து இரங்கும்மன்னன்பால் - உடம்பு அழியும் படி மனம் முறிந்து வருந்தும் தசரதனிடத்து; உன் புலக்குஉரிய சொல்களை உணர்த்தச் செல்கெனோ? - உனது அறிவு வாய்ந்த சீரிய வார்த்தைகளைஉணர்த்தப் போகின்றேனோ (அல்லது) ; தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? - ! இயமனது தூதுவன்போலச் செல்லக் கடவேனோ’ செய்தி சொல்லு முன்னரே தசரதன் இறந்துபடுவான் ஆதலின், ‘இயம தூதன்போலச் செல்வேனோ’என்றான். 22 |