1863.‘ “அங்கிமேல் வேள்வி செய்து
    அரிதின் பெற்ற நின்
சிங்க ஏறு அகன்றது” என்று
    உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு, இனி,
    என்னின், கேகயன்
நங்கையே கடைமுறை
    நல்லள் போலுமால்!’

     ‘அங்கிமேல் வேள்வி  செய்து - நெருப்பின்கண் அசுவமேதம்,
புத்திர காமேட்டிமுதலிய யாகங்களைச் செய்து;  அரிதின் பெற்ற -
அருமையாகப் பெற்றெடுத்த;  உன்சிங்க ஏறு அகன்றது’ - உன்னுடைய
ஆண்சிங்கம் காடு சென்றுவிட்டது;  என்று  -;  உணர்த்த- சொல்ல;
செல்கெனோ? - செல்லக் கடவேனோ;  இனி-;  எங்கள் கோமகற்கு-
தசரதனுக்கு;  என்னின் - என்னைக்காட்டிலும்; கடைமுறை - இறுதியாகப்
பார்க்குமிடத்து; கேகயன் நங்கையே - கைகேயியே; நல்லள். போலும் -
நல்லவளாவாள் போலும்.

     என்னைவிடக் கைகேயி நல்லவள் என்றான்! கைகேயி வார்த்தை
கேட்டும் உயிரோடு இருந்ததசரதன் என்வார்த்தை கேட்டவுடனேயே
உயிரை விடுவான் என்று சுமந்திரன் வருந்தினன். ‘ஆல்’ஈற்றசை.       24