துயர் மிகுதியுற்ற சுமந்திரனை இராமன் எடுத்து அணைத்துப் பேசுதல்  

1865.தடக் கையால் எடுத்து,
     அவன் - தழுவி, கண்ண நீர்
துடைத்து, வேறு இருத்தி,
     மற்று இனைய சொல்லினான் -
அடக்கும் ஐம் பொறியொடு
     கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு
     அணுகும் காட்சியான்.

     அடக்கும்  ஐம்பொறியோடு - (புலன்வழிச் செல்லாது) அடக்கிய
ஐம்பொறிகளோடு;கரணத்து அப்புறம் - அந்தக்கரணமாகிய மன
முதலியவற்றுக்கு அப்பால்;  கடக்கும் -கடந்து செல்கின்ற;  வால்
உணர்வினுக்கு -
தூய மெய்ஞ்ஞானத்துக்கு;  அணுகும் காட்சியான் -
நெருங்கிப் புலனாகின்ற தோற்றம் உடைய பரம்பொருளாகிய இராமன்; 
அவன் - அந்தச் சுமந்திரனை;  தடக்கையால் எடுத்து - (தனது) பெரிய
கைகளினால்தூக்கி;  தழுவி  -; கண்ணநீர் - கண்ணிலிருந்து வரும் நீரை;
துடைத்து  -;  வேறுஇருத்தி - தனியாக இருக்கவைத்து;  இனைய -
இத்தகைய (பின்வரும்) சொற்களை;  சொல்லினான் - சொன்னான்.

     பொறிபுலன்களுக்குஅப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கேபுலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பது கூறப்பட்டது. வனவாசத்தை ஒப்புக்கொள்ளாதகருத்தினன் சுமந்திரன் ஆதலால், அவனை இசைவித்துத் திருப்பி அனுப்பவேண்டித் தனியேஅழைத்துச் சென்று பேசினான் இராமன் என்க. 26