1871.‘முந்தினை முனிவனைக் குறுகி , முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறினை,
எந்தையை அவனொடும் எய்தி,“ ஈண்டு, என
சிந்தனை உணர்த்துதி” என்று, செப்புவான்.

     ‘முனிவனை - வசிட்டனை;  முந்தினை குறுகி - முற்பட்டுச் சென்று
அணுகி; முற்றும் - நிரம்பிய; என் வந்தனை முதலிய மாற்றம் கூறினை-
என் வணக்கம்முதலிய வார்த்தைகளைச் சொல்லி;  அவனொடும்
எந்தையை எய்தி -
அவ் வசிட்டமுனிவனொடும்  என் தந்தையை
அடைந்து;  ழுஈண்டு - இங்கே;  என் சிந்தனை - என்மனக் கருத்தை;
உணர்த்துதி’ - தெரிவிப்பாய்;  என்று -; செப்புவான் -சொல்கின்றான்.

     முனிவனோடுதான் தயரதனிடம் போகவேன்டும் என்ற குறிப்பின் திறம்
உணர்க.                                                    32