1872.‘முனிவனை, எம்பியை, “முறையில் நின்று, அரும்
புனித வேதியர்க்கும், மேல் உறை புத்தேளிர்க்கும்,
இனியன இழைத்தி” என்று இயம்பி, “எற் பிரி
தனிமையும் தீர்த்தி” என்று உரைத்தி, தன்மையால்.

     முனிவனை- வசிட்ட முனிவகைக் கொண்டு;  ‘முறையில்நின்று -
நெறியில்நின்று;  அரும் புனித வேதியர்க்கும்- அருமையான தூய
அந்தணர்களுக்கும்; மேல் உறைபுத்தேளிர்க்கும்-மேல உலகில் வசிக்கும்
தேவர்களுக்கும்;  இனியன - நன்மையானசெயல்களை; இழைத்தி’ -
செய்வாயாக;  என்று எம்பியை இயம்பி -என்று  என்தம்பி பரதனுக்குச்
சொல்லி;  ‘என் பிரி - என்னைப் பிரிதலால்உளதாகும்; தனிமையும் தீர்த்தி’ - தனிமைத்துன்பத்தையும் நீக்குக; என்று-; தன்மையால்
உரைத்தி -
இதமாகச் சொல்வாய்.

     பரதனுக்கு இராமன் சுமந்திரன்பால் சொல்லி அனுப்பிய செய்திகள்
இதனுட் கூறப்பெற்றன.                                         33