சுமந்திரனிடம் சீதை, செய்தி கூறல் 1877. | ‘ ஆள்வினை, ஆணையின் திறம்பல் அன்று’ எனா, தாள்முதல் வணங்கிய தனித் திண் தேர் வலான், ‘ஊழ்வினை வரும் துயர் நிலை’ என்று உன்னுவான். வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கினான். |
‘ஆள் வினை - பணியாளன் செய்ய வேண்டிய செயல்; ஆணையின் திறம்பல் அன்று’- தலைவனது கட்டளைக்கு மாறுபட்டு நடத்தல் அன்று; எனா - என்று கருதி (இராமன்கட்டளைப்படி திரும்பிச் செல்வதே முறை என்று); தாள்முதல் வணங்கிய - இராமனதுபாதங்களில் வணங்கி எழுந்த; தனித் திண் தேர் வலான் ? - ஒப்பற்ற வலிய தேரைஓட்டுதலில் வல்லவனாய சுமந்திரன்; ‘ஊழ் வினை வரும் துயர் நிலை’ - ஊழ் வினையால் வருகின்ற துன்பத்தின் நிலை இது; என்று உன்னுவான் - என்று கருதி; வாழ்வினைநோக்கியை - உலக இன்ப வாழ்வுக்குச் காரணமானவளை; வணங்கி - பணிந்து; நோக்கினான் - (செய்தி உளதோ என்ற குறிப்பில்) பார்த்தான். தலைவனது கட்டளைக்குச்கீழ்ப்படிதலே ஆளின் வினை ஆதலின் இராமன் விருப்பப்படி நாடுதிரும்பிச் செல்ல முற்பட்ட சுமந்திரன், அரண்மனையில் உள்ளார்க்குச் செய்தி ஏதேனும்உள்ளதோ என்று அறிவான் போலச் சீதையைப் பார்த்தான். சுமந்திரன் - அமைச்சன், தேர் வலான். பண்டு அரசர்களுக்கு அமைச்சர்களே தேர் ஓட்டும் சாரதியாகவும் இருப்பர். அரசர்களது மந்தணங்களைப் பாதுகாத்தல் அமைச்சர் கடமை ஆதலின், தேர் வலான் - என்பது தேர்ஓட்டுதலில் வல்லவன் என்றும், தேர்தலில் - ஆராய்வதில் வல்ல அமைச்சன் என்றும் இருபொருளுக்கு ஏற்ப அமைந்து நலம் செய்தல் அறிந்து இன்புறுக. தயரதனுக்கும் அமைச்சனாகியசுமந்திரன் தன்மை ஆளும் அரச குடும்பத்தைச் சார்ந்த இராமனையும், சீதையையும் பணிதல் முறை என்பதும் அறிக. ‘வாழ்வினை நோக்கி’ என்பது அரிய சொல்லாட்சி. எல்லாருடைய வாழ்வையும் கருதுபவன் திருமகள், ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி, யாங்கு (குறள். 247.) ஆதலின் உலக வாழ்வுக்கு இன்றியமையாத செல்வத்துக்குரிய திருமகளின் அவதாரம் ஆகிய சீதை‘வாழ்வினை நோக்கி’ எனப்பட்டாள். இனி அவதாரத்திலும், முனிவர் வாழ்வையும், தேவர்வாழ்வையும் கருதி அரக்கர்களை வதம் செய்யும் பெருமானது நோக்கம் நிறை வேற வேண்டித் தான் சிறை புகுந்து மற்றவர்களை வாழ்விக்க வனம் செல்லத் துணிந்தனள் ஆதலின் ‘வாழ்வினை நோக்கி’ என்பதுசீதைக்குப் பொருந்துமாறு அறிந்து இன்புறலாம். 38 |