இராமன் தேற்றவும் சுமந்திரன் விம்முதல் 1879. | தேர் வலான், அவ் உரை கேட்டு, ‘தீங்கு உறின் யார் வலார்? உயிர் துறப்பு எளிது அன்றே?’ எனாப் போர் வலான் தடுக்கவும், பொருமி விம்மினான் - சோர்வு இலாள் அறிகிலாத் துயர்க்குச் சோர்கின்றான். |
தேர்வலான் - சுமந்திரன்; அவ் உரை கேட்டு- சீதை சொன்ன அச் சொற்களைக்கேட்டு; சோர்வு இலாள் - சிறிதும் தளர்ச்சி இல்லாதவளாய சீதை;அறிகிலாத் துயர்க்கு -(வனவாசத்தால் படக் கூடியதாக இப்போது அவள் அறியாம்இருக்கின்ற) துன்பத்தைக் குறித்து; சோர்கின்றான் - மனம் வருந்துகின்றவனாய்; ‘தீங்கு உறின் - (ஊழ்வினையால்) தீமை உண்டானால்; யார்வலார்? - தடுக்கவல்லவர்கள் யார்; உயிர் துறப்பு - உயிரை விடுதல்என்பது; எளிது அன்றே’- (அவ்வளவு ) சுலபமானது அல்லவே;’ எனா- என்று; போர் வலான் - போரில் வல்ல இராமன் தடுக்கவும்; பொருமிவிம்மினான் - மனத்தில் குமைந்துவாய்விட்டுப் பொருமினான். சீதை வனம் புகுந்தால் நேரக் கூடிய துன்பத்துக்குச் சிறிதும் கவலையுறாது தான் வளர்த்தகிளியும், பூவையும் பற்றிக் கவலைப்படுகிறாளே என்று அவள் குழந்தைத் தன்மைக்கு மனம் இரங்கிப்பொருமுவான் ஆயினன் சுமந்திரன். இராமனுடன் செல்வதனாலேயே சிறிதும் சோர்வு இல்லாதவனாகச்சீதை இருக்கிறாள் ஆதலின் ‘சோர்விலாள்’ என்றார். உயிர் துறத்தல் என்பதும் எளிய செயல்அன்று; நான் விரும்பிய போது உயிர் போகாது, அது போக வேண்டிய நேரத்தில்தான் போகும்.ஆகவே, துன்பம் வரின் அனுபவிக்க வேண்டியிருக்குமே அன்றி அதிலிருந்து தப்ப உயிர்துறப்பதும் நம்விருப்பப்படி நடக்கக் கூடிய தல்லவே என்று கருதி வருந்துகிறான் சுமந்திரன். 40 |