1882. | ‘கானகம் பற்றி நல் புதல்வனை காய் உண, போனகம் பற்றிய பொய் இல் மன்னற்கு, இங்கு ஊனகம் பற்றிய உயிர்கொடு, இன்னும் போய் வானகம் பற்றிலா வலிமை கூறு’ என்றான். |
‘நல்புதல்வன் - (தன்னுடைய) நல்ல மகன்; கானகம்பற்றி - காட்டை அடைந்து; காய் உண - (காட்டில்கிடைக்கும்) காய் முதலியவற்றை உண்ண; போனகம்பற்றிய -(அரண்மனையில் இருந்து) அறுசுவை உண்டி அருந்துகின்ற; பொய் இல்மன்னர்க்கு -சத்திய வேந்தனுக்கு; இங்கு - இவ்வுலகில்; ஊன்அகம் பற்றிய உயிர்கொடு - உடம்பிடத்தைப் பற்றியுள்ள உயிரைப் பிடித்துக்கொண்டு (வாழ்ந்து கொண்டிருந்து); இன்னும் போய் வானகம் பற்றிலா வலிமை- இன்னமும் இறந்து போய் மேல் உலகத்தை அடையாத வலிமையை; கூறு’ - ஆற்றலைநினைவூட்டிச் சொல்;’ என்றான்-. போனகம் - அறுசுவை உணவு. ‘பொய்யில் மன்னன்’ என்றது மேலது போல் இகழ்வுரை.‘அன்பற்ற மன்னனுக்குச் சத்தியம் ஒரு கேடா’ என்று ஆத்திரம் அடைகிற இலக்குவனின்மனப்பாங்கு வெளிப்படுகிறது. இராமன்பால் கொண்ட பேரன்பினால் பேசுகிறான் ஆதலின்,தசரதனை முழுமையாக அறிந்திலன் என்க. ‘ஏன் தசரதனும் இராமனுடன் கானகம் வந்திருக்கக் கூடாது’என்பது இலக்குவனின் குறிப்பாக இப்பாடலில் தோன்றும். 43 |