1885. | கூட்டினன் தேர்ப் பொறி; கூட்டி, கோள்முறை பூட்டினன் புரவி; அப் புரவி போம் நெறி காட்டினன்; காட்டி, தன் கல்வி மாட்சியால் ஓட்டினன், ஒருவரும் உணர்வுறாமலே. |
(சுமந்திரன்) தேர்ப் பொறி - தேராகிய பொறியை; கூட்டினன் - தயார்செய்தான்; கூட்டி - அவ்வாறு ஆயத்தம் செய்து; புரவி - குதிரைகளை; கோள் முறை - கொள்ளுகின்ற முறையிலே; பூட்டினன் - தேரில் பூட்டினான்; அப்பரவி போம் நெறிகாட்டினன் - அந்தக் குதிரைகளுக்குப் போகும் வழியைக்காண்பித்தான்; ஒருவரும் உணர்வு உறாமல் - (உறங்குகின்ற உடன் வந்த நகர மாந்தர்)ஒருவரும் சிறிதும் உணராதபடி; தன் கல்வி மாட்சியால் - தன் தேரொட்டும் கல்விச் சிறப்பால்; ஓட்டினன் - (ஒலியில்லாமல்) ஓட்டினான். குதிரைகளைத் தேரிற் பூட்டுங்கால் சேணம் இட்டுக் கண்ணை மறைப்பர் ஆதலின், ‘போம்நெறி காட்டினன்’ என்றார். இனி, தேர் சென்ற கவடுகறைக் காட்டிச் சென்றான் என்றல் இங்குச்சிறப்பின்மை அறிக. கூட்டினன் - கூட்டி, காட்டினன் - காட்டி, என்று ஒன்றை ஒன்று சொற்கள் தொடர்தலின் ‘ஏகாவளி’ என்னும் அலங்காரமாம். ‘கோள் முறை’ என்பது குதிரைகள் வலம், இடம்பூட்டும் முறையாகும். ‘ஏ’ காரம் ஈற்றசை. 46 |