இராமன் முதலிய மூவரும் இரவில் செல்லுதல்  

1886.தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும் , உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே, சேமமாகக் கொண்டு,
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே.

     ‘ஐயனும் - இராமனும்;அல்லின் நாப்பண் - நள்ளிரவில்;
தையல்தன்கற்பும் - சீதையின் கற்பும்;தன் தகவும் -தன் மேன்மைப்
பண்பும்; நம்பியும் - இலக்குவனும்;  மை அறு கருணையும் - குற்றமற்ற
அருளும்; உணர்வும் -ஞானமும்; வாய்மையும் -சக்தியமும்; செய்ய தன்
வில்லும்
- நேரிய தனது வில்லும் (ஆகிய இவற்றையே);  சேமம் ஆகக்
கொண்டு -
தனக்குப் பாதுகாவலாகக் கொண்டு;போயினான் - சென்றான்.

     தகவும், கற்பும், கருணையும், வாய்மையும் அருவப் பொருள்கள்.
தம்பியும், வில்லும்உருவப்பொருள்கள். இரண்டையும்  உள்ளும் வெளியும்
பாதுகாக்கும் உதவிகளாகக் கூறியது ஒரு நயம்.‘வில்லுமே’ ‘ஏ’ காரம் சிறப்பு.
‘நாப்பணே’ ‘ஏ’ காரம் ஈற்றசை.                                  47