நிலவில் மலர்கள் 1889. | காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கித் தேம்பின குவிந்த போலும் செங்கழு நீரும்; சேரைப் பாம்பின தலைய ஆகிப் பரிந்தன, குவிந்து சாய்ந்த, ஆம்பலும்; என்றபோது, நின்ற போது அலர்வது உண்டோ? |
காம்புஉணர் கானம் செல்லும் கரியவன் - மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ளகாட்டில் செல்லுகின்ற இராமனது; வறுமை நோக்கி- (அரச அணிகள் எதுவும் இல்லாத)எளிய வறிய நிலையைப் பார்த்து; தேம்பின- மனம் வருந்தி; செங்கழு நீரும் -செங்கழுநீர்ப்பூக்களும்; குவிந்த போலும் -குவிந்தவற்றை ஒத்துள்ளன; ஆம்பலும்- (இரவில் மலர்ந்திருக்க வேண்டிய) ஆம்பற்பூக்களும்; சேரைப் பாம்பினதலைய ஆகி - சாரைப் பாம்பின் தலையைப்போன்றவையாய்; பரிந்தன- மனம் வருந்தி; குவிந்து சாய்ந்து - வாய்குவிந்து சாய்ந்து கிடந்தன; என்ற போது - என்றால்; நின்ற -மிகுந்துள்ளமற்றைய; போது - மலர்கள்; அலர்வது உண்டோ? - மலர்தல் உளதாகுமோ. செங்கழுநீர் இரவில் குவிதல் இயல்பு. அதனை இராமன் வறுமை நிலை நோக்கி மனம்வருந்திக் குவிந்ததாகக் கூறியது கவிஞரின் தற்குறிப்பேற்றம். இனி இரவில் மலர்ந்திருக்கவேண்டிய ஆம்பல் (குமுதம்) மலரே குவிந்து சாய்ந்தன என்றால் மற்றை மலர்களைச் சொல்லவே வேண்டாம் என்றார். ஒரறிவுயிர்கள் இராமன்பால் காட்டும் அன்பின் செறிவைப்புலப்படுத்தினார். மாலை நேரத்தில் அதாவது முன்னிரவில் குமுதம் மலராதிருத்தலை, ‘குண்டு நிர்ஆம்பலும் குவிந்தன் இனியே, வந்தன்று வாழியோ மாலை’ (குறுந். 122.). என்பது கொண்டுஅறிக. குவிந்த ஆம்பலுக்குச் சாரைப் பாம்பின் தலை உவமை. படம் எடுக்காத பாம்பு சாரைஆதலின் அது உவமையாயிற்று. சாரை - சேரை ஒன்றே. என்ற போது - போது - காலப் பெயர் -நின்ற போது - மலர். பொழுது என்னும் காலப் பெயர். அக்காலத்தே மலரும் மலருக்குப்பெயராய்ப் போது எனவந்தது. மலர் மலர்வதை வைத்துக் காலை - உச்சி மாலை முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு எனக்காலங்களை அறிதல் பழக்கம். 50 |