மூவரும் நிலவொளியில் செல்லுதல்  

1890.அஞ்சனக் குன்றம் அன்ன
     அழகனும், அழகன்தன்னை
எஞ்சல் இல் பொன் போர்த்தன்ன
     இளவலும், இந்து என்பான்
வெஞ்சிலைப் புருவத்தாள்தன்
     மெல் அடிக்கு ஏற்ப, வெண் நூல்
பஞ்சு இடைப் படுத்தாலன்ன
     வெண் நிலாப் பரப்ப, போனார்.

     அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும்- மை மலை ஒத்த இராமனும்;
அழகன்தன்னை -அவ்விராமனை;  எஞ்சல் இல் - குறைதலில்லாத;
பொன் போர்த்து அன்ன -பொன்னால் மூடினாற் போன்ற; இளவலும் -
இலக்குவனும்; வெஞ்சிலைப் புருவத்தாள் தன்மெல்லடிக்கு ஏற்ப -
கொடிய வில்லை ஒத்த புருவத்தை உடைய சீதையின் மென்மையான
பாதத்திற்குப் பொருந்தும்படி;  வெண் நூல் பஞ்சு இடைப்படுத்தால்
அன்ன -
வெண்மையானநூலை உண்டாக்கும் பஞ்சை வழியெல்லாம்
பரப்பி வைத்தாற் போல; இளநிலா - இளையநிலவொளியை; இந்து
என்பான்
- சந்திரன் என்கிறவன்;  பரப்ப - எங்கும்பரவச் செய்ய;
போனார் -

     காட்டில் பரவிய நிலவொளி வெண்பஞ்சைப் பரப்பியது போன்றுள்ளது.
சீதையின் மெல்லியகால்களுக்குக் காட்டுவழி கூர்ங்கற்களால்  உறுத்துமே
என்று கருதிச் சந்திரன் வெண்பஞ்சைப்பரப்பியது  போல நிலவொளி
பரந்தது  என்பது  தற்குறிப்பேற்றம்.  இராம இலக்குவர்கள்நிறத்தால்
கருமையும். பொன்மையும் உடையவர்களே அன்றி உருவத்தால் ஒரே வடிவம்
உடையவர்கள்என்பதால் ‘அழகன் தன்னைப் பொன் போர்த்தன்ன இளவல்’
என்றார். பின் சடாயு இவர்களைக்கானகத்தில்முதலில் கண்டபோது ‘என்
துணைவன் ஆழியான், ஒருவனை,  இருவரும் ஒத்துள்ளார்’(2704.)  என்று
பேசுவதாகக் கம்பர் கூறுவதை இங்குக் கருதுக.                       51