மூவரும் தென்திசை நோக்கி இரண்டு யோசனை தூரம் செல்லுதல்  

1892.பரிதி வானவனும், கீழ்பால்
     பரு வரை பற்றாமுன்னம்.,
திருவின் நாயகனும், தென்பால்
     யோசனை இரண்டு போனான்;
அருவி பாய் கண்ணும், புண்ணாய்
     அழிகின்ற மனமும், தானும்,
துரித மான் தேரில் போனான்
     செய்தது சொல்லலுற்றாம்.

     பரிதி வானவனும் - சூரிய தேவனும்; கீழ்பால் பருவரை - கிழக்கே
உள்ளஉதயமலையில்; பற்ற முன்னம் - பற்றித் தோன்றும் முன்னர்;
திருவின் நாயகனும் -திருமகள் கேள்வானாகிய இராமனும்; தென்பால் -
தெற்கே; இரண்டு யோசனை போனான்- இரண்டு யோசனை அளவுள்ள
தூரம் சென்றான்; அருவி பாய் கண்ணும் - அருவி போலக்கண்ணீர்
வழிகின்ற கண்ணும்; புண்ணாய் அழிகின்ற மனமும் - புண்பட்டு
வருந்துகின்ற  மனமும்;  தானும் - தானுமாகி;  துரித மான் தேரில் -
வேகமான குதிரைகள் பூட்டியதேரில்;  போனான் - சென்ற சுமந்திரன்;
செய்தது - செய்த செயல்களை;  செப்பலுற்றாம் - (இனிச்) சொல்லத்
தொடங்கினோம்.

    யோசனை என்பது நீட்டல் அளவைப் பெயர். துரிதம் - வேகம்.   53