சுமந்திரன் வசிட்டனை காணுதல் 1893. | கடிகை ஓர் இரண்டு மூன்றில், கடி மதில் அயோத்தி கண்டான்; அடி இணை தொழுதான், ஆதி முனிவனை; அவனும், உற்ற படி எல்லாம் கேட்டு, நெஞ்சில் பருவரல் உழந்தான்; முன்னே முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ! முடிந்தனன், மன்னன்’ என்றான். |
கடிகை ஓர் இரண்டு மூன்றில் - ஐந்து நாழிகைப் போதில்; கடிமதில்அயோத்தி கண்டான் - காப்பமைந்த மதிலையுடைய அயோத்தி நகரத்தை அடைந்து; ஆதிமுனிவனை - வசிட்டனை; அடி இணை தொழுதான் - பாதத்தில் வணங்கினான்; அவனும்- வசிட்ட முனிவனும்; உற்றபடி எலாம் கேட்டு - வனத்தில் நடந்தவையெல்லாம்கேட்டறிந்து; நெஞ்சில் பருவரல் உழந்தான் - மனத்தில் துக்கம் கொண்டு வருந்தி; முன்னே முடிவு எலாம் உணர்ந்தான் - இனி வரப் போவதை எல்லாம் உணர்ந்தவனாய்; ‘அந்தோ முடிந்தனன் மன்னன்’ என்றான் - ஐயோ! அரசன் இறந்து போனான் என்றான். இராமன் திரும்பாமல் வனம் சென்றுவிட்டான் என்ற செய்தியைச் சுமந்திரன் மூலம் அறிந்த வசிட்டன் ‘இனி அரசன் இறந்து போவது உறுதி’ என்கின்ற கருத்தில்‘முடிந்தனன் மன்னன்’ என்றான். ‘தெளிவின்கண் எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று; காலவழுவமைதி. ஐந்து நாழிகை இரண்டு மணி. கடிகை - நாழிகை. 54 |