வசிட்டன் சுமந்திரனோடு தயரதனை அடைதல்  

1894.‘நின்று உயர் பழியை அஞ்சி
     நேர்ந்திலன் தடுக்க, வள்ளல்;
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான்,
     தருமத்திற்கு உறுதி பார்ப்பான்;
வென்றவர் உளரோ மேலை
     விதியினை?’ என்று விம்மிப்
பொன் திணி மன்னன் கோயில்
     சுமந்திரனோடும் போனான்.

     ‘வள்ளல் - தசரதன;  நின்று உயர் பழியை அஞ்சி - உலகத்தில்
நிலைத்துநின்று மேன்மேல் வரும் பழிக்குப் பயந்து; தடுக்க நேர்ந்திலன்-
இராமன் காடுசெல்வதைத் தடுக்க உடன்பட்டானில்லை;  தருமத்திற்கு
உறுதி பார்ப்பான் -
தருமம்நிலைபெறும் தன்மையை எப்பொழுதும்
நாடுபவனாகிய இராமன்; நான் உரைத்தல் ஒன்றும்நோக்கான் - (வனம்
போக வேண்டாம் என்று) நான் சொல்லியது  ஒரு வார்த்தையும் கருதான்
ஆயினன்;  மேலை விதியினை வென்றவர் உளரோ?’ - பழைய
வினையை வெற்றி கொண்டவர் யாராவது  இருக்கிறார்களா?;’ என்று
விம்மி -
என்று புலம்பிக்கொண்டு; சுமந்திரனோடும்-; மன்னன் பொன்
திணி கோயில் -
தசரதனது  பொன்னாற் செய்தஅரண்மனைக்குள்;
போனான்  -.

     வசிட்டன் உரைத்தது  ‘ஐய!  நீ ஒரு ஓங்கிய,  கல்தடம் காணுதி
என்னின், கண் அகல் மல் தடந்தானையான் வாழ்கிலான்’ என்பது  (1766).
நகர் நீங்குபடலம்160 ஆம் பாடலும் (1764.) இதனுடன் கருதத்தக்கதாகும். 55