1895.‘தேர் கொண்டு வள்ளல் வந்தான்’
     என்று தம் சிந்தை உந்த,
ஊர் கொண்ட திங்கள் என்ன
     மன்னனை உழையர் சுற்றிக்
கார்கொண்ட மேனியானைக்
     கண்டிலர்; கண்ணில், வற்றா
நீர்கொண்ட நெடுந் தேர்ப் பாகன்
     நிலை கண்டே, நிலையின் தீர்ந்தார்.

     உழையர் - மந்திரிமார்;  வள்ளல் தேர்கொண்டு வந்தான் என்று
தம் சிந்தைஉந்த -
இராமன் தேர்மீது  ஏறித் திரும்பி வந்துவிட்டான்
என்று தம் மனம் தூண்ட; மன்னனை - தசரதனை; ஊர்கொண்ட திங்கள்
என்ன -
பரிவேடத்தாற் சூழப்பெற்றசந்திரன் போல; சுற்றி -; கார்
கொண்ட மேனியானைக் கண்டிலர் -
மேகம் போன்றமேனியுடைய
இராமனைக் காணாதவராய்; கண்ணில்-; வற்றா நீர் கொண்ட - வறளாத
பெருக்கெடுக்கும் நீரைக் கொண்ட; நெடும் தேர்ப்பாகன் நிலை கண்டு -
நெடிய தேரைச்செலுத்தும் சுமந்திரனது நிலைமையைப் பார்த்து; நிலையின்
தீர்ந்தார் -
தமது நிலைகெட்டழிந்தார்கள்.

     ஊர் - ஊர்கோள். சந்திரனைச் சுற்றிய ஒளி வட்டம். பரிவேடம்
எனவும் பெறும்.  உழையர்- அமைச்சர் - “அறிகொன் றறியான் எனினும்,
உறுதி, உழை இருந்தான் கூறுல் கடன்’ (குறள்.638)என்பதனுள் அமைச்சனை
‘உழை இருந்தான்’ எனல் காண்க.                                 56