1899.இந்திரன் முதல்வ ராய
     கடவுளர் யாரும் ஈண்டி,
சந்திரன் அனையது ஆங்கு ஒர்
     மானத்தின் தலையில் தாங்கி,
‘வந்தனன், எந்தை தந்தை!’
     என மனம் களித்து, வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர்
     மீள்கிலா உலகத்து உய்த்தார்..

     இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி - இந்திரன்
முதலாகிய தேவர்கள்எல்லாரும் வந்து;  சந்திரன் அனையது - சந்திரனை
ஒத்ததாகிய;  ஓர் மானத்தின்தலையில் தாங்கி - ஒரு விமானத்திடத்தில்
சுமந்து;  ‘எந்தை தந்தை வந்தனன்’ எனமனம் களித்து - எம்முடைய
தலைவனாகிய இராமனின் தந்தையாய தசரதன் வந்துவிட்டான்’ என்று 
மனமகிழ்ச்சி அடைந்து; வள்ளல் - தசரதனை;  உந்தியான் உலகின் -
திருவுந்தித் தாமரையனாகிய பிரமதேவனது  சத்திய லோகத்தின்; உம்பர் -
மேலே உள்ள; மீள்கிலா உலகத்து- தன்னை அடைந்தவர் திரும்ப வாராத
உலகத்தில்;  உய்த்தார் -கொண்டு சேர்த்தார்கள்.

     இராமபிரான் திருமாலின் அவதாரம் ஆதலின், அவனுடைய
தந்தைக்குப் பரமபதம் கிடைத்தல் உறுதி என்பதனால்  சத்தி லோகத்துக்கு
மேற்பட்ட விஷ்ணுலோகத்தில் சேர்ந்தார்கள் என்று கம்பர் கூறினார்.
‘மீள்கிலா உலகம்’ என்பது  வினைவழிப்பிறந்திறந்து நலிவெய்தித் திரும்பி
வராத உலகம் என்பதே பொருள்.  பரமபதத்தில் நித்தியசூரிகளாய்
உள்ளாரும் இறைவனது சங்கற்பத்தால் பிறவாது வந்து போதல் உளதாகலின்
அதுபற்றிமீண்டும் மீட்சிப்

படலத்து இராமனைக் காண தசரதன் வந்து போதற்குத் தடையில்லை என
அறிக. அவ்வாறில்லாக்கால்ஆழ்வார்கள், ஆசார்கள் திரு அவதாரத்துக்குப்
பொருளின்றாய  முடியும். ஆதலின்,  ஆங்கு -அசை.                60