கலிநிலைத்துறை 1902. | ‘தானே! தானே! தஞ்சம் இலாதான், தகைவு இல்லான், போனான்! போனான்! எங்களை நீத்து, இப்பொழுது’ என்னா, வான் நிர் கண்டி மண் அற வற்றி, மறுகுற்ற மீனே என்ன, மெய் தடுமாறி விழுகின்றாள். |
‘தஞ்சம் இலாதான் - எளிமை இல்லாதவனும்; தகைவு இல்லான் - எவற்றாலும்தடுக்க முடியாத பெரு வலிமை படைத்தவனும் ஆகிய தயரதன்; தானே! தானே - தனியாக; எங்களை நீத்து - எங்களை யெல்லாமல் கைவிட்டு; இப்பொழுது போனான்! போனான்!’ -;என்னா - என்று சொல்லி; வான் நீர் சுண்டி - மழை நீர் இல்லாமல்போய்; மண் அற வற்றி - மண்ணிலும் நீர் இல்லாமல் வறவி; மறுகுற்ற - கலங்குதல் அடைந்த; மீனே என்ன - மீனைப் போல (உயிர் ஊசலாட); மெய் தடுமாறிவிழுகின்றாள் - உடம்பு நடுங்கி விழுகின்றாள். மேல் நீரும்கீழ் நீரும் இல்லாத பொழுது மீன் உயிர்வாழ இயலாமல் தடுமாறுதல் போல,தசரதனை இழந்தும், இராமனைப் பிரிந்தும் கோசலை தடுமாறினான் என்றார். அடுக்குகள்அவலத்தின்கண் வந்தன. தஞ்சம். - பற்றுக் கோடு எனப் பொருள் கொண்டு, பற்றுக்கோடுஅற்றவனாய்ப் போனான் எனக் கூறி, இராமனாகிய பற்றுக்கோட்டை இழந்தபடியால் என்பதும்ஒன்று. தஞ்சம் எண்மைப்பொருட்டாதலை. “தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே” என்பதனால் (தொல். சொல். 268) அறிக. இஃது இடைச்சொல். 63 |