1904.‘நோயும் இன்றி, நோன் கதிர்
     வாள், வேல், இவை இன்றி,
மாயும் செல்வ மக்களின்
     ஆக; மற மன்னன்
காயும் புள்ளிக் கர்க்கடம்,
     நாகம், கனி வாழை,
வேயும், போன்றான்’ என்று
     மயங்கா விழுகின்றாள்.1

     ‘மறமன்னன் - வலிமை மிக்க தயரதன்; நோயும் இன்றி -
இறப்பிற்குக்காரணமான பிணி இல்லாமல்;  நோன் - வலிய;  கதிர்,  வாள்,
வேல்;  இவை இன்றி- ஒளியுடைய வாள்,  வேல் முதலிய ஆயுதங்களும்
இல்லாமல்;  செல்வ மக்களின் ஆக -அன்புக்குரிய மக்களினால் ஆக;
மாயும்- இறந்துபட்டான்; காயும் புள்ளி -வெறுக்கின்ற புள்ளிகளையுடைய;
கர்க்கடம் - நண்டு; நாகம் - பாம்பு;  கனிவாழை - பழம் தரும் வாழை
மரம்;  வேய் உம் - மூங்கில் ஆகிய இவற்றை; போன்றான்’ - ஒத்தான்;
என்று  மயங்கா விழுகின்றாள் -  என்று சொல்லிமயங்கி விழுந்தாள்.

     தன் மகனாலேயே மன்னன் இறந்துபட்டான்.  நண்டு கருவுயிர்க்கும்
போது  இறந்து  படும், நாகம் தன் முட்டையாலே இறந்து படும், வாழை
குலை ஈனும் போது இறந்து படும், மூங்கில்தன்பக்கக் கிளைகள் தோன்றும்
போது உராய்வினால் பற்றி அழியும்,  இவ்வாறு இவை தன்வம்சத்தாலேயே
என்று அழுகிறாள் கோசலை. “நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்து,
கொண்ட கருவழிக்கும் கொள்கை போல்” ‘மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற
காய் கூற்றம்’ (நான்மணிக். 84.), “புத்தன்றாய் நண்டு இப்பி வாழை புன்
மூங்கில், கத்தும் விரியன் கடுஞ்சிலத்தி- இத்தனையும், வேலாலும் வாளாலும்
அன்றியே தாம் கொண்ட, சூலாலே தம்முயிர்க்குச் சோர்வு”நீலகேசி உரை
(மேற்கோள் உலோகவசனச் செய்யுள்) ஆகியவற்றை இங்கே ஒப்பு நோக்கி
உணரலாம்.நண்டும், பாம்பும் தன் கருவால் அழியும் என்பதை உயிர்நூலார்
உடன்படுவதில்லை.                                             65