1905. | ‘வடித் தாழ் கூந்தற் கேகயன் மாதே! மதியாலே பிடித்தாய் வையம்; பெற்றனை பேரா வரம்; இன்னே முடித்தாய் அன்றே மந்திரம்?’ என்றாள் - முகில்வாய் மின் துடித்தாலென்ன, மன்னவன் மார்பில் துவள்கின்றாள். |
முகில் வாய் - மேகத்திடத்து; மின் துடித்தால் என்ன - மின்னல் துடித்தது போல; மன்னவன் மார்பில்- தசரதன் மார்பில்; துவள்கின்றாள்- துயரதத்தால் துவளும் கோசலை; ‘வடித்தாழ் கூந்தல் கேகயன் மாதே! - கை செய்துஅழகுற்றுத் தொங்கி நீண்ட கூந்தலையுடைய கைகேயியே! - மதியாலே - உன்புத்திவல்லமையால்; வையம் பிடித்தாய்- அரசாட்சியைப் பிடித்துக் கொண்டாய்; பேராவரம் பெற்றனை - மாறுபட முடியாத வரத்தைப் பெற்றாய்; இன்னே - இப்போதே; மந்திரம் முடித்தாய் அன்றே’ - உன் ஆலோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா; என்றாள்- வடித்தல் - வாரிச் சீவி ஒழுங்குறுத்தல். நினைத்த காரியத்தை அவ்வண்ணமே. அப்பொழுதேநிறைவேற்றிக்கொண்ட கைகேயியின் புத்தி வன்மையைக் கூறி அவலிக்கிறாள் கோசலை. முகில்வாய் மின் - தசரதன் மார்பில் விழுந்து புரளும் கோசலை. தசரதனை இங்கே முகில் என்றபடியால் அவனும் இராமன் போன்று கார் மேனியன் ஆதல் வேண்டும் என அறியலாம். 66 |